'ஏதோ ஒருநாள் முழுக்க பறந்துவிட்டு மறுநாள் வரலாம்' என்றுதான் போனேன் ..ஆனால் ஐந்து நாட்களாக 'பட்டறை' தொடர்புள்ள நிறைய வலைப்பூக்களை மேய்ந்து இறக்கைகளையே கிழித்துக் கொண்டேன். வானவில்களைத் தேடித்தான் பறந்தேன்.. சில மின்னல்களையும் சந்தித்தது நான் சற்றும் எதிர்பாராததே! அதிலும் இத்தனை வீரியமிக்க ஆள்கொல்லி மின்னல்கள் ?
பட்டறையின்போதே.. 'கட்டற்ற சுதந்திரம்' பற்றியும் ..சில 'விளிம்புநிலை பதிவு'களை பற்றியும் கேட்டறிந்தேன் என்றாலும் கூட.. இப்படி பட்டறையில் கலந்து கொண்டவர்களை உள்ளடக்கிய 'சுத்துபத்து பதினெட்டு' கிராம எல்லைக்குள்ளேயே இத்தனை ..ஆக்ரோஷம்..வன்மம்.. வசைபாடல்! தாங்கல சாமி! ஓரிருநாட்கள் மூர்ச்சையாகித்தான் போனேன். அதிலும் பத்துவருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு (வன)வாசம் முடித்து அண்மை வருடங்களாகத்தான் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கவே எனக்கு எதிர்ப்புசக்தி குறைவுதான் போலும். அந்த அளவுகோல்படி இன்றும் தரை இறங்காமல் முழுக்க காணாமல் போகவேதான் வாய்ப்பு ..ஆனாலும் அதிக சேதாரமின்றி - இன்று தரை இறங்கிவிட்டேன். காரணம் இறக்கைகள் கிழிந்தால் என்ன 'இதோ உதவிக்கு' என்று நிறைய அன்பர்கள் விசிறிகளாகி அரங்கேற்றத்திற்கு ஆதரவு தந்திருந்ததுதான்! முதல்நன்றி பாலபாரதிக்கு! தொடர்ந்து.. சிவகுமார்,பொன்ஸ்,சிந்தாநதி,நாஞ்சிலான்,வெய்யிலான்.. anonymous நந்தா தாமோதர் சந்துரு sathia.. அத்தனை அன்பர்களுக்கும் நன்றி! நன்றி!
மற்றபடி நான் இப்படி எழுதுவதன் மூலம் ஆக்ரோஷமாக எழுதுபவர்களை விமர்சிப்பதாக கொள்ளவேண்டாம். ஆக்கப்பூர்வமாக 'ரெளத்திரம் பழகு'பவர்களை எப்போதும் பிரமிப்போடே நோக்குகிறேன். ஆனால் மோசமான வசைச்சொற்களை தமிழ் எழுத்துக்களாக பார்க்க நேர்கையில் மிக மிக வலி அடைகிறேன். அமெரிக்காவில் குடியேறவோ, அரேபியா, சிங்கப்பூர் - நாடுகளில் காலத்திற்கும் உழைக்கவோ நிச்சய வாய்ப்பிருந்தும் தமிழ்மொழி , தமிழ்மனிதர்கள் ,தமிழ் கலாச்சாரம் , தமிழ்திரையுலகம் என்று ஏங்கியே நாடு திரும்பிய --------- (மடையன்/முட்டாள்/பைத்தியக்காரன்/பாக்கியசாலி - எது உசிதமோ நிரப்பிக் கொள்ளுங்கள்) என்ற நிலையில்தான் ஆதங்கப்பட்டேனே தவிர என்னைப் பொறுத்தவரை 'எல்லோரும் நல்லவரே! 'வசைபாடும்போது கூட தமிழை இத்தனை லாவகமாக.. சுவாரஸ்யமாக அனாயாசப்படுத்தும் இவர்களும் எனைப்போல கதைகள் எழுதி சம்பாதிக்கலாமே?' என்றும் தோன்றுகிறது.
மற்றப்படி .. 'என் செந்தமிழ் தாய்நாட்டிற்கு பிடிவாதமாக திரும்பிய எனது மன உறுதி குறித்து, வருடங்கள் மூன்றாகியும் .. இன்னமும் எனக்குப் பெருமையே! நிறைவே!
* இன்னொரு இடுகைக்கு முயலுகையில் தடுமாறி திரிந்ததில் குழம்பிப்போய் இன்னொரு வலையையே ['ஐஷ்வர்யன் கதை உலகம்' aishwaryyan.blogspot.com] பின்னிவிட்டேன். நிலாச்சாரலில் வெளிவந்த 'பெயர் உதிர்காலம்' கதையையும் அதில் இட்டுவிட்டேன். *
2 comments:
நாளை வருகிறேன் என்றவர் நாலைந்து நாளாய் காணாமல் போகவும் நினைத்தது தான். பதிவுக்கடல் அவரை மூச்சுத் திணற வைத்துவிட்டது என்று நினைத்தது போலவே...எப்படியோ முச்சடக்கித் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி...
அனுபவசாலியான நீங்களே இப்படி என்றால்... புதிதாக பதிவுலகம் கண்ட இளையவர்கள், மாணவர்கள் திரும்பி வருவார்களோ என்னமோ?
தொடர்ந்து எழுதுங்கள். தற்போதைய நிலையில் வலையுலகமும் வெளியுலகின் ஒரு வகையான எக்ஸ்டன்ஷனாகவே உள்ளது. ஆகையால் எல்லா வகைக் கருத்துக்களும் இங்கே மேலோங்கியே இருக்கும்.
நாம் பல விஷயங்களை இங்கே கற்றுக் கொள்ள முடியும். கற்றுக் கொச்டுக்க முடியும்.
தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
Post a Comment